ஊரக உள்ளாட்சி தேர்தலில் செயல்படவேண்டிய ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர், “தற்போது நீட் தேர்வு குறித்து திமுக அரசு பேசுகின்றது. இதனை கொண்டுவந்தது அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவும் தான். அப்போது எதுவுமே செய்யாத திமுக கட்சி இப்போது நீட் தேர்வினை வைத்து அரசியல் செய்கிறது.
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற அந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண செலவிற்கு பணம் ஆகியவை அனைத்தும் தரப்பட்டது. ஆனால் திருமண மண்டபத்தில் திருமணம் செய்தால் அந்த திட்டத்தில் பயனடைய முடியாது என்றும், கார் வைத்திருந்தால் கிடையாது என்றும் திமுக அரசு கூறுகிறது. இதனால் மக்களுக்கு எதுவும் வந்து சேர முடியாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மின்சாரம் எதற்காக துண்டிக்கப்பட்டது? என்று கேட்டால், நம்ம ஊர் அறிவாளி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அணில் செல்வதினால் கரண்ட் கட் ஆகிறது என்று கூறுகிறார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும். அணிலுக்கு பிறகு பாம்பு என்று கூறிய இவர் இப்போது என்ன சொல்ல இருக்கிறார் என்று தெரியவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.