மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்பட பலரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நகரின் மைய பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட சிலை உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதற்காக கோவில் முழுவதிலும் சுமார் 2 டன் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மதியம் 12 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கி பால், சந்தனம், மஞ்சள், தயிர், எண்ணெய், சீயக்காய், போன்ற நறுமண பொருட்களை கொண்டு பட்டாச்சாரியார்கள் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இந்த விழாவில் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியரின் ஸ்ரேயா சிங், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.