தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை தற்போது வழங்கப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகளும் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் ரூபாய் 4 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஒரு ஆண்டாக திருநங்கைகள் நலவாரியம் செயல்படவில்லை என்பதால் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.