பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திறந்தவெளி கலை அரங்கத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட கலை மன்றத்தின் முதல் கலை நிகழ்வு தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு புத்தகத்தை வெளியிட சபாநாயகர் அப்பாவு அதனை பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியதாகும். போராட்டத்திலும் முத்திரை பதித்த மாவட்டம் நெல்லை மாவட்டம். நாட்டுப்புற கலைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களாக நலிவடைந்துள்ளனர். அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவரும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்புறக் கலைகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கலை நிகழ்வுகள் கோவை உட்பட மூன்று மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கட்டாயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.