ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு இன்று சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 83..
1961 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நல்லம நாயுடு, 2 முறை குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியுள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆளுநரிடம் விருது வாங்கியுள்ளார்..
1997 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முதன்மை அதிகாரியாக இவர் பணியாற்றியது மட்டுமில்லாமல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் இருந்துள்ளார்..
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும் – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் எஸ்பியாகவும் இருந்து ஓய்வுபெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன்.. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாக பணியாற்றியவர். ஊழல் வழக்குகளை – குறிப்பாக அதிமுக ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வெளிவந்தவுடன் ‘நீதி வென்றது’ என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் “என் கடமை – ஊழல் ஒழிக” என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி – துறையில் தான் சந்தித்த சவால்கள் – அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் விசாரணை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு – பொது வாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து தான் பணியாற்றிய துறைக்கும், பொது பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் – அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..