100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா என்பதை மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக, தொடக்கத்தில் தடுப்பூசி பொறுப்பு முழுவதும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றன. தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து கொண்டுவந்தாலும், முன்பு ஏற்பட்ட மனித இழப்புகளையும், பாதிப்புகளையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த பாதிப்புகளுக்கு காரணம் பாஜக அரசு மட்டுமே. இந்த இழப்புகளுக்கு பாஜக அரசு முழு பொறுப்பு ஏற்காமல் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதையே பெருமையாக பேசிக் கொண்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய படத்தை இடம்பெறச் செய்து மோடி அவர்களே நன்றி நன்றி என்று கூறி மக்கள் கூறுவது போல் தங்களுக்கு தாங்களே விளம்பரத்தை செய்துகொண்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உலகிலேயே 100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியாதான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்.
பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக தொடக்கத்தில் தடுப்பூசி போடுகிற மொத்தப் பொறுப்பும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டது. மாநில அரசுகளே தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தவுடன் அந்த கொள்கையை கைவிட்டு மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசு மூலமாக தடுப்பூசி போட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்ததற்கு யார் பொறுப்பு? இத்தகைய பேரிழப்பு குறித்து மோடி கவலைப் படுவதே கிடையாது. ஆனால் 100 கோடி தடுப்பூசி போட்டதை மட்டும் பெருமையாக கொண்டாடி வருகின்றனர். இத்தகைய பிரச்சாரங்கள் மூலமாக பாஜக அரசின் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது” அதில் அவர் தெரிவித்துள்ளார்.