பாடலாசிரியர் மதன் கார்க்கியினுடைய புதிய முயற்சியால் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி உள்ளது.
இணையம் மூலம் தமிழ் கற்க விரும்புவோருக்கு தகுந்தவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் வழி இணைய வகுப்புகளையும் ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளார்கள்.
‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய வகுப்புகளில் வழங்கப்படுகிறது. ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியர் மற்றும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாக இணைந்து தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு இப்பொழுது முப்பதே நாட்களில் நனவாகியுள்ளது. பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற அமைப்புகளின் கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த கல்வி, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வேகமாக கவர்ந்துள்ளது. உலகமெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் கல்வி திட்டத்தை எடுத்துச் செல்லும் நோக்கிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.