வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துவிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சௌந்தர்ராஜன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் சௌந்தர்ராஜனின் வீட்டில் இருந்து பயங்கர சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் சௌந்தர்ராஜன் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சௌந்தர்ராஜனின் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் கூறும் போது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.