கடந்த 5ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 7-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து விமானம் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற போது திடீரென குலுங்கியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கு வங்காள அரசு அறிக்கை கேட்டு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் தொடர்பில் கூறியதாவது, “நான் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் எதிரே மற்றொரு விமானம் திடீரென வந்ததால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இருப்பினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் உயிர் பிழைத்தேன். சுமார் 6000 அடிக்கு கீழே விமானம் இறங்கியது. இதனால் எனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அந்த வலி உள்ளது” என்று அவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.