மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டணி அருகே புலிமார் தட்டுவிலை பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய தாயார் கமலாபாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். இதில் கமலாபாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கமலாபாய் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த6 1/2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கமலாபாய் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து கமலாபாயின் மகள் ஜெயந்தி ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.