சலவை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமாகிவிட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அய்யனார்கோவில் தெருவில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறையாறு தோட்டம் மேலவீதியில் தனக்கு சொந்தமாக சலவை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு மதியழகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் திடீரென அவரது கடையில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அந்த கடையிலிருந்த வாடிக்கையாளர்களின் சேலை, வேட்டி, சட்டை, உரிமையாளரின் ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், ரூபாய் 5000 மற்றும் இஸ்திரி பெட்டி ஆகியன எரிந்து நாசமாக்கிவிட்டது. மேலும் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 1 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.