மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் இறந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சக்திவேல் நேற்று மாலை ஆடுகளை வெளிப்புறத்தில் கட்டியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் கடித்து குதறிய நிலையில் 16 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டுள்ளனர். மேலும் வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.