அமெரிக்காவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு நபரின் மீது கார் ஏறி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தை சேர்ந்தவர்கள் மேடியோ சல்வடோர் (33 வயது), சோபியோ சொடேலோ டோரிஸ் (51 வயது). இவர்கள் இருவரும் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்தன்று இவர்கள் வேலையை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு தனது தோழியுடன் இரவு 12 மணிக்கு ஜாலியாக வெளியில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது கார் ஓட்டிய அந்த சிறுமி போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் சிக்னலை வேகமாக கடந்துள்ளார். இதனை கவனித்த காவல்துறையினர் அந்த ஓட்டுனரை எச்சரிப்பதற்காக காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த சிறுமி காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை மீண்டும் வேகமாக ஓட்டியுள்ளார்.
அப்போது தனது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இருவரின் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காரை விட்டு இறங்கிய அந்த சிறுமி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அச்சிறுமியை பிடித்து அவரின் மீது வழக்கு பதிவு மட்டும் செய்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றம் அந்த சிறுமி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காகவும், விபத்தை ஏற்படுத்தியதற்காகவும், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததற்க்காகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அச்சிறுமியை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.