குடிபோதையில் தென்னை நார் மில்லுக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னை நார் மில் உள்ளது. இந்நிலையில் மில்லில் இருந்த தென்னை நார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் காந்தி, மல்லீஸ்வரன் ஆகியோர் குடிபோதையில் தென்னை நார் பண்டலுக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் மில்லுக்கு அருகில் நின்று கொண்டிருந்த காந்தி மற்றும் மல்லீஸ்வரன் ஆகிய இருவரையும் சரவணன் கண்டித்துள்ளார். இதனால் சரவணனை பழிவாங்கும் நோக்கத்தோடு இருவரும் இணைந்து தென்னை நார் பண்டலுக்கு தீ வைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காந்தி மற்றும் மல்லீஸ்வரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.