நள்ளிரவு நேரத்தில் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சியில் க.புதூரில் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அத்துமீறி நுழைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்டு அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். மேலும் தான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும், தெரியாமல் இந்த பகுதியில் நுழைந்து விட்டதாகவும், தன்னை மன்னித்து அனுப்பி விடுமாறும் அந்த நபர் கதறினார்.
இதனை நம்ப மறுத்த பொது மக்கள் திருடன் என நினைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைக்கும் நோக்கில் அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தாகம் எடுப்பதாக கூறி அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பது போல சென்று திடீரென அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் குடியிருப்புகளில் அத்துமீறி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.