ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய காதல் மனைவியை கோபத்தில் அடித்து கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகில் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவரான புகழ் கொடி (29). இவர் மனைவி 21 வயதுடைய சரிதா. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். புகழ் கொடி கடந்த 17ஆம் தேதி அன்று இரவு தனது ஆட்டோவில் காதல் மனைவி சரிதாவை தலையில் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
சரிதா தண்ணீர் எடுக்கும் போது வழுக்கி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவரிடம் புகழ் கொடி கூறினார். இதையடுத்து சரிதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதற்கிடையே சரிதாவின் அக்கா ஸ்ரீ லட்சுமி தனது தங்கையின் தலையிலுள்ள காயத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து கண்ணகி நகர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் காவல்துறையினர் சரிதாவின் கணவர் புகழ் கொடியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து சரிதா தாயார் சம்பூர்ணா புகழ் கொடி மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் புகழ்கொடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கடந்த 17ஆம் தேதி சரிதா தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆண் நண்பர் ஒருவரிடம் செல்போனில் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று எழுந்த புகழ் கொடி செல்போனில் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகமாகி கோபமடைந்த புகழ் கொடி தனது காதல் மனைவி சரிதாவை சரமாரியாக அடித்து உதைத்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சரிதாவை தனது ஆட்டோவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.
இதனையடுத்து மருத்துவரிடம் புகழ்கொடி தண்ணீர் குடம் எடுக்கும் போது சரிதா கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது என்று நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணகி நகர் காவல்துறையினர் கொலை வழக்கு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து புகழ் கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.