சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தமிட்டதால் மாரியம்மாள் எழுந்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஆடுகளை தாக்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் உடனடியாக மின் விளக்கை போட்டுள்ளார். இதனால் ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடி சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 4 ஆடுகளை பார்வையிட்டுள்ளனர். இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. எனவே வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.