திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆவி பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் அவரை பூசாரி முனுசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதற்காக தனது சகோதரி மகேஸ்வரியுடன் பவுர்ணமி பூஜையையொட்டி முனுசாமி ஆசிரமத்திற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு திடீரென ஹேமமாலினி விஷம் குடித்து மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்ததால் மாணவியின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்த சாமியார் முனுசாமி தலைமறைவாகி விட்டார். உடல்நலக்குறைவால் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவிக்கு அந்த நள்ளிரவில் நடந்தது என்ன? எதற்காக அவர் விஷம் குடித்தார் ? என்று பூசாரி முனுசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரமத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.