பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் தொழிலதிபரான ஸ்ரீபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக ஸ்ரீபாலன் நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர் உள்ளே நுழைந்தார். இதனை அடுத்து சத்தம் கேட்டு பிரியா எழுந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியை கட்டி மிரட்டி பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.
இதற்கிடையே வெளியூர் சென்ற ஸ்ரீபாலன் காரில் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சத்தம் கேட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ஸ்ரீபாலன் திருடன் திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மர்ம நபரை மடக்கி பிடித்து வேடந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பிரபு(25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.