காசியாபாத் பகுதியில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரண்டு சிறுவர்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இவர்களின் தந்தை வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் சகோதரி மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
இரவு ஒரு மணி அளவில் 14 வயது இரட்டை சிறுவர்கள் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். 25வது மாடியிலிருந்து சிறுவர்கள் எப்படி கீழே விழுந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.