அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் போன்ற சர்வதேச பிரச்சனை காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர்.
அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை நவம்பர் முதல் அமலுக்கு வருவதாக அந்த நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை கண்ணோட்டங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.