Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம்… முப்பெரும் தேவிகளை வழிபடும் முறைகள்….!!!!

இந்தியாவில் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இதில் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் தேவியை வழிபடும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1. முதல் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் துர்கா தேவியை சாமுண்டீஸ்வரியாக வழிபட வேண்டும். இந்த நாளில் தேவியை மல்லிகை மற்றும் வில்வத்தால் அலங்கரித்து, வெண்பொங்கல் வைத்து வழிபடலாம்.

2. இரண்டாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 2-ம் நாளில் துர்கா தேவி வராகி தேவியாக காட்சி புரிவாள். அதோடு கருமாரி தேவியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும் போற்றப்படுகிறாள். இந்த நாளில்  தேவியை முல்லை மற்றும் துளசியால் அலங்கரித்து புளியோதரையை பிரசாதமாக படைத்து வழிபடலாம்.

3. மூன்றாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 3-ம் நாளில் துர்கா தேவி கன்யா கல்யாணி, சாம்ராஜ தாயினி, மகேந்தரி, இந்திராணி போன்ற வடிவங்களில் காட்சி கொடுக்கிறாள். இந்த நாளில் தேவிக்கு செண்பகம் மற்றும் சம்பங்கி போன்றவைகளால் அலங்காரம் செய்து சர்க்கரை பொங்கலை படைத்து வழிபடலாம்.

4. நான்காம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 4-ம் நாளிலிருந்து செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை வழிபடுகிறோம். இந்த நாளில் லட்சுமி தேவி வைஷ்ணவி மற்றும் ரோகிணி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த நாளில் தேவியை மல்லிகை பூக்களால் அலங்கரித்து அன்னம் படைத்து வழிபட வேண்டும்.

5. ஐந்தாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் ஐந்தாம் நாளில் லட்சுமி தேவி மகேஸ்வரி தேவியாக காட்சி புரிவாள். இந்த நாளில் தேவிக்கு முல்லைப் பூ அலங்காரம் செய்து தயிர் சாதம் படைத்து வழிபடலாம்.

6. ஆறாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 6-ம் நாளில் லட்சுமி தேவியை சர்ப்ப ராஜ ஆசனத்தில் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் ஜாதி மலரை வைத்து பூஜித்து தேங்காய் சாதம் படைத்து வழிபடலாம்.

7. ஏழாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 7-ம் நாளில் சரஸ்வதி தேவி சுமங்கலியாக கருதப்படுகிறாள். இந்த நாளில் தேவிக்கு தாழம்பூ சூடி தும்பை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நாளில் எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக வைத்து வழிபடலாம்.

8. எட்டாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 8-ம் நாளில் சரஸ்வதி தேவி சினம் தணிந்த கோலத்தில் நரசிம்மி வடிவமாக காட்சி தருகிறாள். இந்த நாளில் ரோஜா மலரை சூடி பொங்கலை பிரசாதமாக வைத்து வழிபடலாம்.

9. ஒன்பதாம் நாள் பண்டிகை

நவராத்திரி பண்டிகையின் 9-ம் நாளில் சரஸ்வதி தேவி அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரி, சாமுண்டி மாதா மற்றும் அம்பிகை வடிவில் காட்சி தருகிறாள். இந்த நாளில் தேவியை தாமரை மலர்களால் அலங்கரித்து பால் பாயாசம் வைத்து வழிபடலாம்.
மேலும் நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் விரதம் இருக்க முடியாவிட்டாலும் கடைசி 3 தினங்களில் சப்தமி, அஷ்டமி மற்றும் நவமி தினங்களாக இருப்பதால் அந்த நாளில் மட்டும் விரதம் இருந்தால் கூட 9 நாட்களுக்கும் விரதம் இருந்தால் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |