Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வரிசையில் பூஜை செய்வது எதற்காக….?

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை முறையாக வழிபடுவது எதற்காக என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக சிருஷ்டியின் படி பார்த்தால் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்றுதான் கூறுவார்கள். ஆனால் நவராத்திரி பண்டிகையின் போது சிருஷ்டியின் வரிசை மாறி துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று‌ வழிபடுவோம். இது எதற்காக மாறுகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கலாம். அதாவது துர்கா தேவி தான் முதல் மகள். இதனால் தான் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களிலும் துர்கா தேவியை நாம் பூஜிக்கிறோம். துர்கா பூஜையின் போது துர்க்கை தான் அதி தேவதை. துர்கா தேவி அகம், புறம் ஆகியவற்றை அழகுபடுத்தி தூய்மைப் படுத்துவதற்காகவே முதலில் வருகிறார்.

இதனால்தான் துர்கா தேவியை முதல் 3 நாட்களுக்கு வழிபடுகிறோம். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் துர்கா தேவி சர்வ மங்கள ரூபிணியாக காட்சியளிப்பாள். அப்போது மலர்களால் துர்கா தேவியை அலங்காரம் செய்து வழிபட்டால் நம்முடைய கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள். அதன் பிறகு நவராத்திரி பண்டிகையின் 2-வது நாளில் துர்கா தேவி சர்வ பூரண பூஜிதமாக காட்சியளிப்பாள். இந்த 2-வது நாளில் துர்கா தேவியை நகைகளால் அலங்கரித்து வழிபடுவார்கள். இதைத்தொடர்ந்து நவராத்திரி பண்டிகையின் 3-வது நாளில் துர்கா தேவி முதலில் செய்த பூஜைகளை நினைத்து மகிழ்ந்து நமக்கு ஞானத்தை தருகிறாள் என்பது ஐதீகம்.

துர்கா தேவியை முதல் 3 நாட்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்திய பிறகு, மகாலட்சுமியை அடுத்த 3 நாட்களுக்கு வழிபடுவோம். இந்த 3 நாள் பூஜையின் போது மகாலட்சுமி மங்கலம், அருள், ஞானம் போன்றவற்றை தருவார். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை 4-வது நாளில் பூஜை செய்யும் போது நம்பி வந்த பக்தர்களை ஒருபோதும் கைவிட மாட்டார். 5-வது நாள் பூஜையின் போது பஞ்சபூதங்களுக்கும் மரியாதை செலுத்துவதால், சகல சௌபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். 6-வது நாள் பூஜையின் போது அறுசுவை உணவு கிடைக்காவிட்டாலும் பசியின்றி உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை பாதுகாப்பாள்.

இந்த 6 நாட்கள் பூஜையும் முடிவடைந்த பிறகு 7-வது நாளில் வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வழிபடுவோம். இந்த 7-வது நாள் பூஜையின் போது நாதஸ்வர ரூபமாக எழுந்தருளும் கலைவாணி வீணையுடன் காட்சி தந்து வினயத்தை தருகிறாள். 8-வது நாள் பூஜையின் போது நம் வாழ்நாளில் எட்டாததையும் எட்ட செய்து நமக்கு ஏற்றத்தை தருகிறாள். 9-வது நாள் பூஜையின் போது அழியாத நன்மையை தந்து செல்வம் அழிந்தாலும் கல்வி ஒருபோதும் அழியாது என்பதை நமக்கு உணர்த்துகிறாள்.

மேலும் 10-வது நாளில் வெற்றி தரும் விஜயதசமி பூஜை கொண்டாடப்படுகிறது. விஜயம் என்றால் வெற்றி. தீமைகள் அழிந்து நன்மை பெருகும் நாள். நாம் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பூஜையில் 9 நாட்களிலும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி போன்ற முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் எதிலும் நலம்பெறும் வகையில் நன்மையும், வெற்றியும் கிடைக்கும்.

Categories

Tech |