ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி தொடங்கி அக்டோபர் நான்காம் தேதி முடிவடைகிறது. அந்த ஒன்பது நாட்களும் நவராத்திரியில் விரதம் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்றது போல விரதத்தை கடைபிடிக்கலாம். விரதத்தை கடைப்பிடிப்பதற்கும் உணவுகளை சாப்பிடுவதற்கும் சில குறிப்புக்கள் உள்ளன.
அதாவது பெரும்பாலும் விரதம் இருக்கும்போது பழங்கள், மோர், பால் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சாப்பிடலாம். ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் பால் அல்லது மோர் ஏதாவது அருந்தலாம். வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம். திட உணவாக சாப்பிடாமல் ஏதாவது கஞ்சி அருந்தலாம். அதனைப் போலவே பழ வகைகள், அவல் வெல்லம், தேங்காய் மற்றும் வாழைப்பழம், பயிறு வகைகள் மற்றும் ராகி ஆகியவற்றை சாப்பிடலாம்.இல்லையென்றால் பால் மற்றும் பழம் மட்டுமே சாப்பிட்ட ஒன்பது நாட்களும் விரதம் இருக்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
நவராத்திரி விரதம் இருக்கும் சமயத்தில் அதிக மசாலா, பூண்டு, வெங்காயம் மற்றும் முருங்கை உள்ளிட்ட பல உணவுகள் தவிர்க்கப்படும். அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.விரதம் இருப்பவர்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பழங்களை தவிர்த்து ரெடிமேடாக பாக்கெட்டில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.ஏனென்றால் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து இந்த வகை உணவுகளை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேசமயம் தொடர்ந்து ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். விரதம் இருக்கும் சமயத்தில் மனதை எவ்வித சிந்தனைகளும் இல்லாமல் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.