தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த எட்டாம் நாள் அக்டோபர் 3ஆம் தேதி வருகிறது. அன்றைக்கு ஸ்ரீ துர்கா தேவி, நரசிம்ம தாரணி, மகா தேவி சக்திகளை வழிபடுவது நல்லது மேலும் சம்பங்கி, குருவாச்சி மலர்களை கொண்டு தேவிகளை பூஜித்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் காலை நேரத்தில் பால் சாதமும் மாலை வேளையில் மொச்சை, சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபட்டால் மிகவும் நல்லது. அதோடு கொலுவுக்கு முன்பு அமர்ந்து கொண்டு தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
துர்காஷ்டமி அன்று அம்மனுக்கு உகந்த மந்திரங்கள் பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்ய வேண்டும். மேலும் 2 முதல் 8 வயது குழந்தைகளை அழைத்து அவர்கள் பூஜித்து விருந்தளித்து கண்ணாடி வளையல், பொட்டு, மருதாணி, சிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆசி பெறலாம். மேலும் கொலு வைக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் பத்ம கோலம் போட்டு விளக்குகளை ஏற்றி தினமும் பூஜிக்க வேண்டும். இதனை அடுத்து கொலு வைக்காதவர்கள் தங்களது வீட்டில் பூஜிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
கொலு வைக்காதவர்கள் அகண்ட தீபம் ஏற்று ஏற்றி தேவியை பூஜித்து வழிபடலாம். அகண்ட தீபம் என்றால் அணையா விளக்கு என்று அர்த்தமாகும். இது நாம் வழக்கமாக ஏற்றும் அகல் தீபத்தை தான் குறிக்கிறது. நவராத்திரியின் எட்டாம் நாளில் அகண்ட தீபம் ஏற்றி இரண்டு நாட்களுக்கு அதனை அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு வழிபட்டால் நமக்கு தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.