Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

‘நவீன கால ராஜராஜசோழனாக எடப்பாடி திகழ்கிறார்’ – ராஜேந்திர பாலாஜி

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க அதை வேளாண் மண்டலமாக விரைவில் சட்டமாக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் எனவும், நவீனகால ராஜராஜ சோழனாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டினார்.

நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பெற்றோர்களுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழ்நாடு மக்கள், விவசாயிகள் அனைவரின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றுள்ளது’ எனக் கூறிய அவர்,

‘சோழமண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்குக் காரணமானவர், திமுக தலைவர் ஸ்டாலின் தான்’ எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் உண்மையைச் சொல்லி, நல்ல திட்டங்களை தந்து நாட்டுக்கு நல்லது செய்துவருகிறார் என்ற ராஜேந்திர பாலாஜி, விவசாயிகளின் நலனுக்காக காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்க, அதை வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி எடுத்துள்ள முடிவு விரைவில் சட்டப்பூர்வமாக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நாம் கரிகாலச் சோழன் வரலாற்றையும், ராஜராஜசோழன் வரலாற்றையும் படித்துள்ளோம். ஆனால் மக்களுக்குத் தேவையான திட்டங்களையும் அறிவிப்புகளையும் தந்து நவீனகால ராஜராஜ சோழனாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் என்பதே உண்மை’ என்று கூறினார்.

Categories

Tech |