தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த நடிகர் விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி உடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் சேகரை தமிழக வணிக வளத்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தனி நிர்வாகி நியமனத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம். ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து. ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இரண்டு முறை காலக்கெடுவை நீடித்த உயர்நீதிமன்றம் இறுதியாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி திரு. எம். ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். 2020-22 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.