18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் கத்திரிப்புலம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன்(38) என்பவர் பணியாற்றி வந்ததோடு பள்ளி அருகிலேயே டியூஷன் சென்டரும் நடத்தி வந்திருக்கின்றார். இவர் அப்பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார்.
மேலும் டியூஷன் சென்டருக்கு மாணவிகளை வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். இதனால் சென்ற 21ஆம் தேதி பாதிக்கப்பட்ட 18 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்கள். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தி புகாரின் பேரில் அசோகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.