ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சரஸ்வதி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். வீடுகளிலும் பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் சிக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிங்கார வேலவர் ஆலயத்தில் விஜயதசமியையொட்டி இன்று அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆலயத்திற்கு உள்ளேயே சுவாமி வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து அம்பு எய்தலும் அரங்கேறின.கொரோனா ஊரடங்கு அமல் காரணமாக பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.