ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சீமா பத்ரா. இவர் ராஞ்சியிலுள்ள தனது வீட்டில் பெண் ஒருவரை அடைத்துவைத்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன், கும்லா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணிஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலைசெய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார்.
இதில் வத்சலா டெல்லியிலிருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டுமாக ராஞ்சிக்கு வந்து சீமாவின் வீட்டில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். இதனால் ஒருக்கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் சுனிதா தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். எனினும் சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்துவைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுபற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் சீமாவின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சுனிதாவை கடந்த 22 ஆம் தேதி அன்று மீட்டனர். பா.ஜ.க தலைவரின் அசோக்நகர் இல்லத்திலிருந்து ராஞ்சி காவல்துறையினர் அவரை மீட்டனர். அதன்பின் சீமாவின் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகள் பற்றி சுனிதா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதாவது, அங்கு தன் பற்களை இரும்பு கம்பியால் உடைத்ததாகவும், சூடான பாத்திரங்களால் உடம்பில் எரித்ததாகவும், சிறுநீரை நக்க வைத்தனர், தன் நாக்கைப் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக சுனிதா கூறினார்.
மேலும் தனக்கு உணவு, தண்ணீர்கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். இருப்பினும் பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை தன் தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால்தான் தற்போது நான் உயிருடன் இருக்கிறேன் என சுனிதா கூறினார். இந்நிலையில் தன் வீட்டுப் பணியாளரை கொடூரமாக தாக்கிய ஜார்க்கண்ட் பா.ஜனதா தலைவர் சீமா பத்ரா இன்று காலை கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில பா.ஜனதா தலைவர் குணால் சாரங்கி கூறியிருப்பதாவது “இது போன்ற செயல்கள் மற்றும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
அவர் முன்பே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் நிச்சயமாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார். இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அவர் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். யாராக இருந்தாலும் நம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான இது போன்ற செயல்களைச் செய்தால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆகவே இது போன்ற நன்நடத்தையை பா.ஜனதா பொருத்துக்கொள்ளாது” என அவர் கூறினார்.