சிறுமியை ஆடைக்கு மேல் மார்பைத் தொட்டு பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுமியை ஆடைக்கு மேல் உடலைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரது உடலை தீண்டி உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என தீர்ப்பு வழங்கியது.
உடம்புடன் உடம்பை உரசி அதன் மூலம் மேற்கொள்ளப்படுவது மட்டும்தான் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை கிளப்பிய இந்த தீர்ப்பு குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் முறையீடு செய்தார். எதிர்காலத்தில் இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் நாக்பூர் கிளையின் தீர்ப்பு போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே தோற்கடித்து விடும் என்பதால், அதை நிச்சயமாக ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. சட்டத்தின் உருவாக்கம் என்பது அந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அதை அழிப்பதாக இருக்க கூடாது எனவும், சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து குற்றவாளி தப்பிக்க அனுமதிப்பதாக இருக்கக் கூடாது எனவும், கூறியுள்ள உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு சட்ட விதிகளின் அபத்தமான விளக்கத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
எனவே நாக்பூர் கிளையின் தீர்ப்பை நீக்கம் செய்வதாக கூறிய உச்சநீதிமன்றம், போக்சோ சட்டப் பிரிவுகளின் படி சிறார்களை நேரடியாக தொடுவது அல்லது தொடாமல் செய்வது என எதுவாக இருந்தாலும் குற்றவாளியின் நோக்கம் தவறாக இருக்கும் பட்சத்தில் அது போக்சோ சட்ட பிரிவின் கீழ் குற்றம் என்பதையும் உறுதி செய்துள்ளது. குற்றவாளிகள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.