முன்னணி கதாநாயகர்கள் சொந்த பட நிறுவனங்கள் துவங்கி திரைப்படங்கள் தயாரித்து வெற்றியடைந்துள்ளனர். எனினும் நடிகைகளுக்கு பட தயாரிப்பு தொழில் என்பது ராசி இன்றி இருக்கிறது. பழம்பெரும் நடிகை சாவித்திரி திரைப்படம் தயாரித்து சொத்துகளை இழந்து வீதிக்கு வந்த கதையானது இன்றைக்கும் திரையுலகில் பேசு பொருளாக இருக்கிறது. அண்மையில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக தயாரித்து வெளியிட்ட லைகர் படம் படு தோல்வி அடைந்ததால் மீள முடியாத நஷ்டத்தில் நடிகை சார்மி இருக்கிறார். நடிகை ஆக இருந்தபோது நன்றாக சம்பாதித்த சார்மி தயாரிப்பில் இறங்கி பணத்தை அனைத்தும் இழந்து கடனாளியாகி நிற்கிறார்.
அதேபோல் ஜெயசித்ரா தயாரித்த “நானே என்னுள் இல்லை” படம் தோல்வியடைந்தது. தேவயானியும் திரைப்படம் தயாரித்து நஷ்டத்தை சந்தித்தார். நடிகை ஜெயசுதா நீண்டகாலம் திரையுலகில் நீடித்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். இதனால் அவருக்கு சினிமா தயாரிப்பில் நல்ல புரிதலும் இருந்தது. பின் கணவருடன் இணைந்து திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். அதன்பின் 4 படங்களை தயாரித்ததில் ஒரு படம்கூட வெற்றி அடையவில்லை.
அதனை தொடர்ந்து நடிகை பூமிகா திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே தகிட தகிட எனும் பெயரால் படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். கதாநாயகர்களுக்கு இணையாக லேடி அமிதாப் பச்சன் என பேசப்பட்ட விஜயசாந்தி 2 திரைப்படங்களை தயாரித்து அது இரண்டுமே படுதோல்வியடைந்தது. நடிகை ரோஜா சமரம், லத்தி சார்ஜ் ஆகிய சொந்த படங்களை தயாரித்து அதுவரை அவர் சம்பாதித்த அனைத்தையும் அந்த படங்கள் வாயிலாக இழந்து விட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். கல்யாணியும் கே.2.கே திரைப்படம் தயாரித்து நஷ்டத்தை சந்தித்தார். இன்னும் பல்வேறு நடிகைகள் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் பட்டியலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.