நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘முதலாவதாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கை சென்றடைகிறது. ஏழை தாய்மார்களும் இப்போது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இலவச வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழைகளும் கூட தற்போது வீடு கட்டி லட்சாதிபதியாக மாறிவிட்டனர்.
ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாட்டில் உள்ள ஏழைகள் இன்று எரிவாயு சிலிண்டர், கழிவறை போன்ற வசதிகளை பெற்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் இன்னும் 2014 ஆம் ஆண்டிலேயே உள்ளனர். அவர்கள் எப்போது திருந்தப் போகிறார்களோ தெரியவில்லை.? பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கைவிடபட்ட போதிலும் அவர்களது அகங்காரம் குறையவில்லை.!” இவ்வாறு அவர் பேசினார்.