லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கூறியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்காங் ஏரி சமவெளிப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி லடாக்கில் துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியா மற்றும் சீனா எல்லைப்பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. எல்லைப் பகுதியை தாண்டி துப்பாக்கி சூடு உள்ளிட்ட எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது” என்று கூறியுள்ளது.