ஈரோடு மாவட்டம், கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மகன் கௌதமன் இவர் இன்ஜினியர் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சௌந்தர்யாவை இவர் நேற்று கோபியின் திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யாவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் முடிந்து பழங்கால முறைப்படி மணமக்களை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இது தொடர்ந்து நேற்று திருமணம் முடிந்து புது தம்பதிகள் மாட்டு வண்டியில் ஏறி கோபி நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளாள பாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே புதுமண தம்பதிகள் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மாட்டு வண்டியில் பயணம் செய்த தம்பதியர்கள் கூறுகையில்: “நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டோம் என்று அவர் கூறினார். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.