Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பல்வேறு நீர் ஓடைகள், அருவிகள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. ராணுவ தகவல் தொடர்புக்கான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் இந்த தொகுதி தான் உள்ளது. நாங்குநேரி பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன் வாழைக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 முறை வென்றுள்ளது. திமுக 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது எம்எல்ஏவாக அதிமுகவின் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,76,356 ஆகும். நாங்குநேரி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கை. நான்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

வாகைகுளம் தொழில்நுட்ப பூங்காவை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். களக்காடு அருகில் உள்ள திருகுறுங்காடு பகுதியில் விளைநிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை தேவை என்பது விவசாயிகளின் வேண்டுகோள். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்  திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் வாழைக்காய்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கிய நகராக இருந்த நாங்குநேரி நாளுக்கு நாள் அதன் பொலிவை இழந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வதை தடுக்க தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் இன்னும் நிலுவையிலேயே உள்ளன.

Categories

Tech |