Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க இதை விற்க மாட்டோம்… சிவகங்கையில் கிராம மக்கள்… சுவரொட்டி விழிப்புணர்வு..!!

சிவகங்கை மாவட்டம் மருதிபட்டி கிராமத்தில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி ஊராட்சியில் சுமார் 250 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை பெரும்பாலானோர் தங்கள் வீட்டின் முன்பு ஒட்டி வைத்துள்ளனர். வீட்டின் நுழைவு கேட்டிலும், முன்பக்க சுவரிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி அரளிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் மருதிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் அனைத்து வீடுகளிலும் நுழைவு கேட்டிலும், வீட்டின் முன்பக்க சுவரிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சம்சுதீன் என்பவர் கூறும்போது, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது நம்முடைய கடமை.

எனவே நாங்கள் எங்கள் ஓட்டை வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்திற்காக விற்க மாட்டோம். மேலும் நல்ல திட்டங்களை கொண்டு வரும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம். எங்கள் கிராமத்தில் வாழும் மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். அந்த கிராம பெண்கள் ஓட்டுக்கு பணம் பெறுவதை விரும்புவதில்லை. இதுகுறித்து அவர்கள் கூறும்போது நல்ல வேட்பாளர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுடைய வாக்கை நாங்கள் விற்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |