மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கொடுத்த விருதுகள் தான் சாட்சி. கடந்த அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பிடிஆர் குற்றம் சாட்டுகிறார். அவர் கூறிய குற்ற சாட்டை நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். ஒருவேளை குற்றசாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு அவர் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
அதன் பிறகு நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத ஒருவரிடம் நிதி அமைச்சருக்கான பொறுப்பை திமுக அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வரி உயர்வுக்கு நிதி அமைச்சர் மட்டும்தான் காரணம். ஆனால் இல்லாததை சொல்லி மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் 48 லட்சம் பேருக்கு கடனை தள்ளுபடி செய்வதாக கூறியது. ஆனால் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடனை தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறினார்.