நிவாரணத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஆசனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10,000 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் காற்றில் சாய்ந்து விழுந்ததால் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கான நிவாரணத்தொகை இதுவரை சரியாக வழங்கவில்லை. எனவே நெல் பயிர்களுக்கு காப்பீடு இருப்பதை போன்று வாழை மரங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கனமழையால் சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.