சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ., தர்மபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை நேற்று மேற்பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுடைய சமாதி மாண்டவர் பூமியானது தருமபுரி மாவட்டம் பங்குநத்தம் ஊராட்சி ராஜாகொல்ல அள்ளியை அடுத்துள்ள ஏகல்திட்டு பகுதியில் கல்திட்டுகள் ஆக உள்ளது. இதனால் இப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தமிழக அரசு தனது கட்டுக்குள் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளேன். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் அரசாணையும் வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் இந்த பகுதிக்கு தொல்லியல் அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிடுவதாக கூறியுள்ளார். மேலும் அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி கூறிக்கொள்கிறேன். இதனையடுத்து அதியமான் கோட்டமானது, தகடூரை ஆண்ட அதியமான் மன்னருக்காக கட்டப்பட உள்ளது. இங்கு தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதியமான் மன்னரின் புகைப்பட ஓவியங்கள் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசானது அருங்காட்சியகத்தை மேம்படுத்தி தர வேண்டும்” என்று எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.