5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நர்சுகளுக்கும் வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சுகளுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தினால் அவர்களின் பணி பாதிக்காத வண்ணம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் உள்ள நர்சுகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொருளாளர் கீதா கூறும்போது, நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனையில் நர்சுகள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியுள்ளதாகவும், ஆனால் தங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பணியில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்டம் முழுவதும் 350 நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை எனில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.