பெரம்பலூர் அருகே கிராம மக்கள், குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத்தில் குடிநீர் கடந்த ஒரு வாரமாக சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு பெண்கள் உள்ளிட்டோர் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தினர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் செட்டிகுளம்-பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.