எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த திமுக அரசு எந்த நேரத்தில் தான் பொறுப்பேற்றதோ… வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதைப் பற்றி அதிமுக கூறிய போதெல்லாம் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைக் கூறி திமுக சமாளித்து வந்தது. ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர் வாயாலேயே கொரோனா ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது என்று ஒப்புக்கொண்டார். மேலும் பொங்கலுக்கு பின்னர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது என்று குற்றம் சாட்டினார். அப்போது நாளொன்றுக்கு 775 பேர் என்ற விகிதத்தில் கொரோனா தொற்று பரவி பரவி வந்தது.
அந்த சமயத்தில் திமுகவினர் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தங்கள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இப்போது வைரஸ் பரவல் வேகம் நான் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால் தற்போது மதுபான கடைகளை மூடுவது குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டும் மதுபான கடைகள் மூலம் கொரோனா பரவாதா..?? இந்த நிலைமையிலும் மதுபானக்கடைகளை திறந்து வைக்க வேண்டியதன் அவசியம் என்ன..?? மக்களின் உயிரை கூட பெரிதாக எண்ணாமல் அரசின் கல்லாவை நிரப்ப வேண்டும் என்பதையே ஒரே குறிக்கோளாக கொண்டு மதுபானக் கடைகளை திறந்து வைத்துள்ளது தற்போதைய திமுக அரசு. மக்களின் உயிரோடு விளையாடாமல் உடனடியாக மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் கூறியுள்ளார் .