கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நாசாவின் மின்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணியானது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம் நேற்று இரவு கிரிக்கெட் மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன. விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட் விர்ஜினியாவிலிருந்து விண்கலத்தை சுமந்து கொண்டு செல்ல புறப்பட தயாராகியது.
அப்போது இறுதி நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு அமைப்பில் சிறிய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு, கோளாறை சரிசெய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் கோளாறுகளை விரைவில் சரிசெய்து வெள்ளிக்கிழமை இரவு ராக்கெட் ஏவும் பணி தொடங்கும் என நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது.விண்வெளியில் செயல்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, கம்ப்யூட்டர் சாதனங்கள், விர்ச்சுவல் கேமரா மற்றும் பரிசோதனை கருவிகள் என்று 8000 பவுண்ட்கள் எடை கொண்ட பொருள்கள் அந்த விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளன.