இங்கிலாந்து ஐகோர்ட்டில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்தியா சார்பில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாமுவேல் கூசி அந்த வழக்கிற்கு கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தீர்ப்பளித்தார். அதில் இந்தியாவுக்கு நிரவ் மோடியை நாடுகடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் மோசடி தொடர்பான அதிகாரபூர்வமான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அந்த வழக்குகளை இந்தியாவில் திரும்ப சந்திக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். அந்த தீர்ப்பிற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி ப்ரீத்தி பட்டேல் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான நாடு கடத்தும் ஒப்பந்தப்படி இங்கிலாந்து உள்துறை மந்திரிக்கு மட்டுமே குற்றவாளியை நாடுகடத்துவதற்கு அதிகாரம் உள்ளது. இதனால் நிரவ் மோடி இங்கிலாந்து உள்துறை மந்திரி ஒப்புதல் அளித்ததையடுத்து நாடு திரும்புவதில் உள்ள சிக்கல்கள் நீக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து உள்துறை மந்திரி மற்றும் கீழ் நீதிமன்றம் ஆகியோரின் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக இங்கிலாந்து ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி நிரவ் மோடி மேல்முறையீடு செய்துள்ளார்.