நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124a ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு இந்த சட்டத்தை கடை பிடிப்பது ஏன்? மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேசத் துரோகச் சட்டம் விடுதலை பெற்ற பின் ஏன் தொடர்கின்றது. தேசத்துரோக வழக்கு என்பது ஒருத்தரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அதை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பது போல உள்ளது.
இந்த சட்டம் மத்திய அரசுக்கு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீது, அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேச துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்கள் என்று பார்த்தால் எண்ணிக்கை மிக குறைவு. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடுகிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.