மாநிலங்களிடையே பயணிக்க இ பாஸ் தடை விதிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வு நிலையில் மாநிலத்திற்கு உள்ளாகவும் மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மற்றும் ஆட்கள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும், அதற்கு இ பாஸ் போன்ற எந்தநடைமுறையும் இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும் மாநில அரசுகள் தங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இதுதொடர்பாக உத்தரவினை பிறப்பித்தார்கள். குறிப்பாக தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மற்றும் ஆட்கள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் சிரமம் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.