நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த சட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் மின்சாரத்தின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி இந்தியாவில் குறைவாக உள்ளதால், மின்சார வாகனங்களின் விற்பனையும் குறைவாக உள்ளது. இதனால் போக்குவரத்து துறையின் முக்கிய இடமாக பார்க்கப்படும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 123 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் அமைக்கப்படும். அதைத்தொடர்ந்து 2030க்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் சார்ஜிங் நிலையம் அமைக்கப்படும் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உறுதியளித்துள்ளார்.