நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும். பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் பற்றிய ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இயற்பியல் வேதியியல் ஆகிய முக்கிய படிப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை சோதிப்பது தேவையாக உள்ளதால், அப்ஜெக்டிவ் வடிவில் தேர்வு நடத்துவது பற்றி ஆலோசிப்பதாகவும் வரும் ஆண்டுகளில் இது அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.