விலை உயர்வு, புதுப்புது விதிமுறைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வரும். அதிலும் புதிய நிதியாண்டு தொடக்கம் என்றால் கூடுதலாக ஏராளமான மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கக் கட்டணமும் நாடு முழுவதும் உயர்கிறது. அதிலும் குறிப்பாக சுங்கக் கட்டணம் சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுங்கக்கட்டணத்தையும் அதிகரிப்பது விலைவாசியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அந்த பட்டியலில் உள்ள பாராசிட்டமால் முதல் கொரோனா மருந்து வரை 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை இன்று (ஏப்.1) முதல் 10.7 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மாற்றப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம். ஏப்ரல் மாதம் முதல் வீடு கட்டும் எளிய மக்களின் கனவும் சிக்கலாக போகிறது. ஏனென்றால் இதுவரை வீடு வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வந்த வரி சலுகைகளை மத்திய அரசு நிறுத்த உள்ளது. ஒரே ஆண்டில் பேப்பர் விலை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் ஏப். 1 முதல் தமிழகத்தில் உள்ள ஆப்செட் பிரின்டிங் உள்ளிட்ட அனைத்து அச்சகங்களிலும் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் வேலைகளுக்கு 40 சதவீத கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல பெரிய நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவதில் முனைப்பில் உள்ளன. வாகனங்களின் விலையை இன்று முதல் உயர்த்தப் போவதாக கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி தனது வர்த்தக வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 முதல் 2.5% வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இந்தியா Mercedes-Benz கார் விலையை 3% உயர்த்துவதாக கூறியுள்ளது. இதுதவிர, BMW தனது வாகனங்களின் விலையை 3.5% அதிகரிக்கும், டொயோட்டா 4% வரை விலையை உயர்த்தும். அதேபோல் வரும் 5 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ரூபாய் 2 ஆயிரம் வரை விலையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.